×

வடசேரி, மீனாட்சிபுரம் பஸ் நிலையங்களில் குடிநீர் தொட்டிகள்

 

நாகர்கோவில், மே 6 : தமிழ்நாட்டில் தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் காலையில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் வெயில் கொடுமை அதிகமாக உள்ளது. இந்த நிலையில், மாவட்டத்தின் முக்கிய பஸ் நிலையமான வடசேரி பஸ் நிலைய பிளாட்பாரத்தில் குடிநீர் வசதியும் இல்லாமல் இருந்தது. தற்போது வெயில் வாட்டி வதைத்து வருகிறது. காலை முதல் இரவு வரை கடும் வெப்பம் நிலவி வருகிறது.

இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளின் தாகம் தீர்க்க குடிநீர் வசதி எதுவும் இல்லாததால், பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் இருந்து விலைக்கு தண்ணீர் பாட்டில்கள் வாங்கி அருந்த வேண்டிய நிலை இருந்தது. பஸ் நிலையங்களில் பொதுவாக அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் குடிநீர் டேங்க் வைக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்படும். ஆனால் இங்கு குடிநீர் வசதி இல்லாததால், கட்டணம் கொடுத்து குடிநீர் பாட்டில்கள் வாங்க வேண்டிய நிலை உள்ளதாக பயணிகள் கூறினர்.

எனவே மாநகராட்சி சார்பில் குடிநீர் வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் விடுத்தனர். இது தொடர்பாக கடந்த 29ம்தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது. இந்த பிரச்னை குறித்து மேயர், ஆணையர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து தற்போது ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவின் பேரில், வடசேரி பஸ் நிலையத்தில் 3 இடங்களில் தலா 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் டேங்க் அமைத்துள்ளனர்.

அதில் குடிநீர் லாரிகள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் நிரப்பப்பட்டு, பயணிகளுக்கு தண்ணீர் வினியோகம் நடக்கிறது. இதே போல் அண்ணா பஸ் நிலையத்தில் 2 இடங்களில் குடிநீர் டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர ஏற்கனவே மாநகராட்சி சார்பில் 20 இடங்களில் தற்காலிக தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு, குடிநீர் கேன்கள் மூலம் தண்ணீர் வினியோகம் நடக்கிறது. தேவைப்படும் பொதுமக்களுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசலும் வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

The post வடசேரி, மீனாட்சிபுரம் பஸ் நிலையங்களில் குடிநீர் தொட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Vadassery ,Meenakshipuram ,Nagercoil ,Tamil Nadu ,Agni Nakshatra ,Kumari district ,Vadaseri ,
× RELATED நாகர்கோவில் – கன்னியாகுமரிக்கு இரவு நேர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுமா?